ஆன்மிகம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க தடை: கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது

Published On 2020-09-18 04:00 GMT   |   Update On 2020-09-18 04:00 GMT
அமாவாசை தினமான நேற்று கன்னியாகுமரிக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால், கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

அந்த நாட்களில் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரைக்கு ஆண்டுதோறும் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதிகாலை முதலே பொதுமக்கள் கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கடலில் நீராடவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த 1-ந்தேதி ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கடற்கரைக்கு செல்ல தடை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மகாளய அமாவாசை தினத்தன்று கன்னியாகுமரி கடற்கரையில் பக்தர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அங்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அமாவாசை தினமான நேற்று கன்னியாகுமரிக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால், கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தது. சிலர் கடற்கரைக்கு செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும், கடற்கரை சாலையிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதே சமயத்தில் நாகர்கோவில் பழையாற்றில் உள்ள சோழன்திட்டை அணையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஆற்றில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பலிகர்ம பூஜை செய்தனர். இதேபோல், ஆரல்வாய்மொழியில் உள்ள பொய்கை குளத்திலும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Tags:    

Similar News