ஆன்மிகம்
தன்வந்திரி

தன்வந்திரி அவதாரம்

Published On 2020-07-06 08:24 GMT   |   Update On 2020-07-06 08:24 GMT
தன்வந்திரி இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை.
தன்வந்திரி இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி(தனிக்கோயிலில்) காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது. தேவர்கள் அசுரர்களுடன் போராடி வலிமை இழந்தவர்களானார்கள்.

அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள். தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு.

எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரமன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார். சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று புராணம் சொல்கிறது.

தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையேச் சூரியன் என்றும் சொல்வார்கள். சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையேக் குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது. 
Tags:    

Similar News