ஆன்மிகம்
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்

சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்

Published On 2020-02-20 08:48 GMT   |   Update On 2020-02-20 08:48 GMT
பக்தர்களின் தலை மீது சடாரி வைக்கப்படுவதன் பின்னால் உள்ள ஐதீகம் பற்றி ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே காணலாம்.
பெருமாள் கோவிலுக்கு சென்று பகவானை வணங்கிய பின்னர் தீபாராதனை முடித்து, துளசி தீர்த்தம் பெற்ற பிறகு பக்தர்களின் தலை மீது, ஒரு மகுடத்தின் மீது இரண்டு திருவடிகள் பொறிக்கப்பட்ட சடாரி வைக்கப்படுகிறது. பக்தர்களின் தலை மீது சடாரி வைக்கப்படுவதன் பின்னால் உள்ள ஐதீகம் பற்றி ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே காணலாம்.

ஒரு முறை வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் சயனக் கோலம் என்ற உறக்கத்திற்கு செல்லும் சமயத்தில், அவரது சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை ஆதிசேஷன் மேல் வைத்து விட்டு, தன்னை தரிசிக்க வந்த முனிவர்களை பார்க்க புறப்பட்டார். அவசரமாக சென்ற நிலையில் அவரது பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளே விட்டு விட்டார். சங்கு, சக்கரம், கிரீடம் ஆகியவற்றின் அருகிலேயே பாதுகைகள் விடப்பட்டது குறித்து, அவை மூன்றும் அதிருப்தி அடைந்து, பாதுகைகள் பற்றி அவமானமாக பேசின. அதனால் வருத்தம் அடைந்த பாதுகைகள் கண்ணீருடன் பகவானிடம் முறையிட்டன.

“என்னுடைய முன்னிலையில் அனைத்தும் சமம் என்பதை உணராமல், கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு, பாதுகைகளை அவமானம் செய்த பலனை அனுபவிக்க, எனது ராமாவதார காலத்தில் சக்கரமும், சங்கும், பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் பிறப்பார்கள். அப்போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் பூஜை செய்து கர்ம பலனை தீர்க்க வேண்டும்..” என்று பகவான் தெரிவித்தார்.

இந்த கதையின் அடிப்படையில் பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடிக்கு சமமான அளவில் அவரது பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் உயர்ந்தவை என்ற தத்துவ நோக்கில் சடாரி பக்தர்களின் தலை மீது வைக்கப்படுகிறது. அதன் மூலம் ஒருவரது ‘நான்' என்ற ஆணவம், அகங்காரம் நீங்கும் என்பதுதான் சடாரியின் அடிப்படை தத்துவமாகும். இறைவனுக்கு முன்னர் அனைவரும் சமம். அவன் முன்னிலையில் பணக்காரன், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையிலும் சடாரி சாற்றப் படுகிறது.

சடாரி சாற்றப்படுவதற்கு வைஷ்ணவ சம்பிரதாய ரீதியாக ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும் வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும், கர்ம வினைகளால் கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன் உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது. அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது என்பது ஐதீகம். மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், சடம் என்ற வாயுவால் பாதிக்கப்படாதவர் நம்மாழ்வார் ஆவார். பனிரெண்டு ஆழ்வார்களுள் ஒருவரான நம்மாழ்வார், நான்கு வேதங்களையும் தமிழில் பாடிய காரணத்தால், ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றப் படுகிறார். ஆழ்வார் திருநகரியில் வசித்து வந்த காரியார் மற்றும் உடைய நங்கை ஆகியோருக்கு குழந்தையாக அவர் பிறந்தார். பிறக்கும் குழந்தைகள் அழுவது உலக நியதி. ஆனால், குழந்தை அழாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தது. அதன் காரணமாக, அவருக்கு மாறன் என்று பெயர் வந்தது. விஷ்வக்சேனரின் அம்சமாக பிறந்த நம்மாழ்வார் தாயின் கருப்பையில் இருக்கும்போதே, சடம் என்னும் வாயுவை கோபமாக பார்த்ததால் சடகோபன் என்றும் அழைக்கப்படுகிறார். அவரை திருமாலின் திருவடி அம்சம் என்று கூறப்படுவது சம்பிரதாயம் ஆகும்.

அதன் அடிப்படையில், கோவிலில் குடிகொண்டுள்ள பெருமாளின் பாதங்களில் சடகோபம் என்ற சடாரி வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் அது பக்தர்களின் தலையில் வைக்கப்படுகிறது. அதாவது, நம்மாழ்வாரையே பெருமாளின் திருப் பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது. அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று, மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும் போது, குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி ஏற்றுக்கொள்வது முறையாகும்.
Tags:    

Similar News