ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரள பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தியதை படத்தில் காணலாம்.

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

Published On 2020-02-17 07:58 GMT   |   Update On 2020-02-17 07:58 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான கேரள பெண்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கொடை விழா அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான பந்தல் கால் நாட்டு விழா கடந்த 8-ந் தேதி நடந்தது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் விழா முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான கேரள பெண் பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். சில பெண் பக்தர்கள் தலையில் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

இதனால் மண்டைக்காடு சந்திப்பு, கடற்கரை, பொங்கலிடும் பகுதி, கோவில் வளாகம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாசிக்கொடை கொடியேற்று விழாவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் கேரள பக்தர்கள் வருகையையொட்டி இப்போதே மண்டைக்காட்டில் திருவிழா களைக்கட்டியுள்ளது.
Tags:    

Similar News