ஆன்மிகம்
பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி

பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி

Published On 2019-10-10 05:29 GMT   |   Update On 2019-10-10 05:29 GMT
துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
துவரங்குறிச்சியில் பழமையான பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 96 கிராம மக்களின் குலதெய்வமாக திகழும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழாவின் தொடக்கமாக கடந்த மாதம் 23-ந்தேதி பூச்சொரிதல் விழாவும், அதைத் தொடர்ந்து 24-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் செட்டியார்குளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்துக் கொண்டும் துவரங்குறிச்சி கடைவீதி வழியாக பூதநாயகி அம்மன் கோவில் வந்தடைந்தனர். இதே போல் கோவில் முன்பு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பூதநாயகி அம்மனை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா சென்றனர். பின்னர் பின்னர் பள்ளி வாசல் அருகே ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரும் அம்மனை வழிபட்டனர். அதன் பின்னர் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி முடிந்ததும் அதிகாலை சாமி புறப்பாடு தொடங்கி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News