ஆன்மிகம்
தேரோட்டம் நடந்ததையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-05-18 08:00 GMT   |   Update On 2019-05-18 08:00 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம், வாகன பவனி போன்றவை நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுவதற்காக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் எழுந்தருளினார். நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன்செல்ல அம்மன் ஊர்வலம் நடந்தது. கீழ ரதவீதியில் தேர் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு சென்றதும் அம்மன் தேரில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு அபிஷேகமும், விசேஷ பூஜைகளும் நடந்தது.

அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதய் உமேஷ் லலித், தேரின் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கீழ ரதவீதியில் இருந்து புறப்பட்ட தேர், தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரதவீதி வழியாக பகல் 12 மணியளவில் நிலைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. 10 மணிக்கு பிறகு மீண்டும் படகு போக்குவரத்து நடந்தது. மாலை சமய உரை, பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
Tags:    

Similar News