ஆன்மிகம்

உடுப்பியில் புலி வேடத்தில் சுற்றும் பக்தர்கள்

Published On 2017-08-14 05:55 GMT   |   Update On 2017-08-14 05:55 GMT
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று உடுப்பியில் ஆண்கள் புலி வேடம் அணிந்து கொண்டு ஊர் முழுவதும் நடமாடுவது வித்தியாசமாக இருக்கும்.
சந்திரன் சாப விமோசனம் பெறும் பொருட்டு 27 நட்சத்திரங்களுடன் சேர்ந்து கிருஷ்ணரை வழிபட்ட தலமே உடுப்பி.

‘உடு’ என்றால் நட்சத்திரம், ‘பா’ என்றால் தலைவர். நட்சத்திரங்களின் தலைவர் சந்திரன், ‘உடுபா’ என்று சந்திரனைக் குறிக்கும் சொல்லே உடுப்பி என மருவி அழைக்கப்படுகிறது.

கடலில் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த கப்பலில் கிருஷ்ண விக்கிரகம் இருப்பதைத் தமது ஞான திருஷ்டியால் கண்ட மத்வாசாரியார், விக்கிரகத்தை மீட்டு இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார். மத்வாசாரியரால் இயற்றப்பட்ட துவாதச பாசுரம் இன்றும் இந்த ஆலயத்தில் பகவானுக்கு சேவிக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கிருஷ்ண விக்கிரகம், ருக்மணி பிராட்டியார் வழிபட்ட சாளக்கிராமத்தால் ஆனது. இந்தத் தலத்தின் தீர்த்த மண்டபத்தில் அருளும் கருட பகவான், அயோத்தியிலிருந்து வாதிராஜ தீர்த்தரால் கொண்டு வரப்பட்டவர் என்கிறார்கள். ஒன்பது வெள்ளியினால் செய்த ஜன்னல்கள் மூலமே பகவான் கிருஷ்ணரை தரிசிக்க முடியும். உடுப்பி கிருஷ்ணரின் கருவறை- கிழக்குப் பக்கக் கதவு விஜயதசமியன்று மட்டுமே திறக்கப்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று ஆண்கள் புலி வேடம் அணிந்து கொண்டு ஊர் முழுவதும் நடமாடுவது வித்தியாசமாக இருக்கும். இந்தத் தலத்தில் ரத யாத்திரையின் போது மூன்று தேர்கள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
Tags:    

Similar News