ஆன்மிகம்

ஸ்ரீரங்கத்தில், ராமானுஜர் ஆயிரமாவது அவதார பெருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-04-27 06:54 GMT   |   Update On 2017-04-27 06:54 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் ராமானுஜரின் ஆயிரமாவது அவதார பெருவிழா நாளை தொடங்குகிறது. இது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
வைணவ மதத்தை பரப்பிய ஆச்சாரியார்களில் முதன்மையானவராக விளங்கியவர் ராமானுஜர். இவர் கி்.பி.1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். காஞ்சீபுரம், திருப்பதி உள்பட பல்வேறு வைணவ தலங்களில் ஆன்மிக பணியாற்றிய இவர் இறுதியாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பூஜை நடைமுறைகளை உருவாக்கினார்.

அரங்கனுக்கு பணிவிடை செய்வதையே தனது குறிக்கோளாக கொண்டிருந்த அவர் தனது 123-வது வயதில் சமாதி நிலை அடைந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் அவருக்கு ஸ்ரீ உடையவர் சன்னதி என்ற பெயரில் தனி சன்னதி உள்ளது.



ராமானுஜரின் ஆயிரமாவது அவதார பெருவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு கேசவன் குழுவினரின் மங்கள இசையும், 6.15 மணிக்கு ஸ்ரீரங்கம் நாராயண ஜீயரின் அருளாசியும், 6.30 மணிக்கு பஜனையும் நடைபெறுகிறது.

29-ந் தேதி காலை 8 மணிக்கு மங்கள இசையும், காலை 8.45 மணி முதல் இரவு 8 மணிவரை உபன்யாசம், பஜனை, ஒளிக்காட்சி, நாட்டிய நாடகம், திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இதை வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி தொகுத்து வழங்குகிறார். 30-ந் தேதி மாலை 6 மணிக்கு முத்துசீனிவாசன் சுவாமி உபன்யாசமும், 7 மணிக்கு ஹரி கீர்த்தன் நிகழ்ச்சியும் நடக்கிறது.

தொடர்ந்து மே 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை தினமும் மாலை நேரங்களில் பல்வேறு உபன்யாசங்கள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, பரதநாட்டியம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.

Similar News