ஆன்மிகம்
திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

செம்பூர் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

Published On 2017-04-26 05:38 GMT   |   Update On 2017-04-26 05:38 GMT
செம்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.
மும்பை செம்பூர் சீரஞ்சீவி நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலின் 45-வது ஆண்டு சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி மற்றும் தேவி ஹோமம், அபிஷேகம், காப்பு கட்டுதல், முளைப்பாரி, திருகல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் துர்கா ஹோமம், பால்குடம் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில் செம்பூர் மேனோ ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், சக்தி கரகம் எடுத்தும், தீச்சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

பின்னர் அம்மனுக்கு கூழ் படைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. இன்று (புதன்கிழமை) தேவி மற்றும் நவக்கிரக ஹோமம், அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா, கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கருணாலயம் அறக்கட்டளை செய்துள்ளது.

Similar News