ஆன்மிகம்
கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவிலை படத்தில் காணலாம்.

அவினாசி ஆதிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது

Published On 2017-04-21 07:36 GMT   |   Update On 2017-04-21 07:36 GMT
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கணியாம்பூண்டி ஊராட்சி முருகம்பாளையத்தில் அங்கையர்கன்னிகாம்பிகை உடனமர் ஆதிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கணியாம்பூண்டி ஊராட்சி முருகம்பாளையத்தில் அங்கையர்கன்னிகாம்பிகை உடனமர் ஆதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் முடிந்ததையொட்டி வருகிற 1-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

முன்னதாக வருகிற 28-ந்தேதி செல்வ விநாயகர் கோவில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு, கோவில் யாகசாலை வந்தடைகிறது. 29-ந்தேதி காலை 6.30 மணிக்கு கணியாம்பூண்டி (கிழக்கு) விநாயகர் கோவிலில் இருந்து யாக சாலைக்கு தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. பின்னர் காலை 10.30 மணிக்கு மகா கணபதி வழிபாடு, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.



மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதல்கால பூஜை, தீபாராதனை நடக்கிறது. 30-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் 2-ம் கால யாகபூஜை, தீபாராதனையும், மாலை 4 மணி முதல் 6 மணிவரை 3-ம்கால யாக பூஜையும் நடைபெற உள்ளது. மே 1-ந்தேதி காலை 6.30 மணிக்கு 4-ம்கால யாகபூஜை, நாடிசந்தானம், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது.

காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மங்கல கணபதி, அங்கையர்கன்னிகாம்பிகை, ஆதிஸ்வரர், பாலதண்டயுதபாணி, பக்த ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், ஆலமர விநாயகர் மற்றும்பரிவார மூர்த்திகளுக்கும், கோபுர கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின்னர் தசதானம், தசதரிசனம், மகாஅபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள்செய்து வருகிறார்கள்.

Similar News