ஆன்மிகம்
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Published On 2017-04-20 04:36 GMT   |   Update On 2017-04-20 04:36 GMT
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

5-ம் நாளான கடந்த 15-ந் தேதி இரவு கருட சேவை நடந்தது. வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும், வேதவல்லி தாயார் சேஷ வாகனத்திலும், ஆண்டாள் அன்ன வாகனத்திலும் வீதிஉலா நடந்தது.



விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 7 மணி அளவில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவில் வெள்ளி பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் பெருமாள் வீதிஉலா நடந்தது. ஏற்பாடுகளை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் முருகன், தக்கார் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Similar News