ஆன்மிகம்
பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

புலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலம்

Published On 2017-04-13 04:54 GMT   |   Update On 2017-04-13 04:54 GMT
கோவை புலியகுளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி, பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கோவை புலியகுளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து 4-ந் தேதி இரவு 12 மணிக்கு அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும், 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், 9-ந் தேதி காலை 10 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு 108 கலச தீர்த்தம் ஊற்றுதல் நிகழ்ச்சியும், 11-ந் தேதி இரவு 12 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடை பெற்றது.

இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், காளியம்மன் சப்பரத்தில் ஊர்வலம் வர பக்தர்கள் நஞ்சுண்டாபுரம் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து தீச்சட்டி மற்றும் பால்குடங்களை எடுத்தும், அலகு குத்தியும் ராமநாதபுரம், சுங்கம் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தீச்சட்டி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவையொட்டி புலியகுளம் மாரியம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அம்மன் திருத்தேர் திருவீதி உலா, இரவு 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு லட்சார்ச்சனை, முளைப்பாலிகை அழைத்தல், இரவு 8 மணிக்கு மகா அபிஷேக அலங்கார ஆராதனையுடன் திருவிழா நிறைவடை கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் அறிவழகன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News