ஆன்மிகம்
குண்டம் இறங்குவதற்காக பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் இடம் பிடித்து காத்திருக்கும் பக்தர்களை படத்தில் காணலாம்

பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா: தீ மிதிக்க காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Published On 2017-04-11 03:05 GMT   |   Update On 2017-04-11 03:05 GMT
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று நடைபெறுவதையொட்டி தீ மிதிக்க கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இடம் பிடித்து வரிசையில் காத்திருக்கிறார்கள்.
சத்தியமங்கலம் அருகே பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 27-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு 4-ந் தேதி குழிக்கம்பம் சாட்டப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெறுகிறது.

இதையொட்டி குண்டம் இறங்குவதற்காக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து உள்ளனர் அவர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புக்கட்டை பகுதியில் இடம் பிடித்து நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவில் வளாகத்தில் முதல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி கோவிலில் இருந்து பக்தர்களை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதையொட்டி கோவிலில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி என்.பழனிக்குமார், பரம்பர அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜப்பன், ராஜாமணி தங்கவேலு, புஷ்பலதா கோதண்டராமன், மகேந்திரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் செய்து வருகிறார்கள்.

Similar News