ஆன்மிகம்

குன்னத்தூர் அருகே சூலக்கல் மாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-04-03 06:59 GMT   |   Update On 2017-04-03 06:59 GMT
குன்னத்தூர் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஆதிகுன்னத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனமர் குன்ற புரீஸ்வரர் கோவில் தென் கிழக்கே அமைந்துள்ள ஒடுக்கம்பாளையம் நட்டுவங்காட்டு தோட்டத்தில் பாலகணபதி, வரசித்தி விநாயகர், அன்னை சூலக்கல் மாரியம்மன், கருவலூர் மாரியம்மன், கன்னிமார், பாலமரத்து கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆன்மிக பக்தர்கள், பொதுமக்கள் உதவியுடன் கோவில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு விக்ரஹம் மற்றும் புதிய விமானங்கள் வேத ஆகம சிற்ப சாஸ்திரங்களின்படி புதியதாக அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன.

அதன்படி கும்பாபிஷேகத்தையொட்டி நேற்றுகாலை 5.30 மணிக்கு மேல் 2-ம் கால யாகவேள்வி, நாடிசந்தனம், புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து சூலக்கல் மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கும் மகாகும்பாபிஷேகம் காலை 8.30 மணிமுதல் 9.30 மணிக்கு நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மாரியம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தசதானம், தசதரிசனம், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Similar News