ஆன்மிகம்
சுயம்பு காரணப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

சுயம்பு காரணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-03-31 04:41 GMT   |   Update On 2017-03-31 04:41 GMT
பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையத்தில் நடைபெற்ற சுயம்பு காரணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே தொங்குட்டிபாளையத்தில் 700 ஆண்டு பழமையான பூமாதேவி, நீளாதேவி சமேத சுயம்பு காரணப்பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் 12 ராசிகளில் ஒன்றான கேதுவின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாக நம்பப்படுகிறது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் தொழில் வளரவும், விவசாயம் செழிக்கவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு வேண்டுதல் வைக்கின்றனர்.

பழமையான இந்த கோவில் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிவுற்று கும்பாபிஷேக வேலைகள் தொடங்கின. யாகசாலைகள் அமைக் கப்பட்டு கடந்த 27-ந் தேதி பூஜைகள் தொடங்கி யது. காலை 8 மணி மற்றும் மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.

முன்னதாக காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, ஐந்தாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் தீர்த்த கலசம் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காலை 9 மணிக்கு விமான கோபுரங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம்செய்தனர். விழாவில் ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகாலராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் பில்லூர் எம்.எஸ்.மணி தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Similar News