ஆன்மிகம்

அருஞ்சிகை ஈஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

Published On 2017-03-22 06:11 GMT   |   Update On 2017-03-22 06:11 GMT
வள்ளிமலை அருகே மேல்பாடியில் உள்ள அருஞ்சிகை ஈஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த மேல்பாடியில் சோமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலை தஞ்சை மன்னர் ராஜராஜசோழன் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

இந்த கோவிலின் எதிரே ராஜராஜசோழனின் தாத்தா அரூர் குஞ்சியதேவன் நினைவிடத்தில் ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அங்குள்ள இறைவன் அருஞ்சிகை ஈஸ்வரனாக வணங்கப்படுகிறார்.

ஒவ்வொரு வருடமும் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் உத்தரயான காலத்திலும், வடக்கு நோக்கி பயணிக்கும் தட்சிணாயன காலத்திலும் 3 நாட்கள் அருஞ்சிகை ஈஸ்வரரான லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் வகையில் இந்த கோவிலை சிற்பக்கலை வல்லுனர்கள் மூலம் ராஜராஜசோழன் வடிவமைத்துள்ளார்.



நேற்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடந்தது. அதன்படி சூரியன் உதயமானதும் காலை 6.20 மணியளவில் லிங்கத்தின் எதிரே உள்ள நந்தி மீது சூரியஒளி விழுந்தது. அதற்கு முன்னதாகவே பக்தர்கள் அங்கு வரத்தொடங்கினர். நந்தி மீது விழுந்த சூரியஒளி படிப்படியாக சன்னதிக்குள் உள்ள லிங்கத்தின் மீதும் விழுந்தது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

லிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்டபோது தீபாராதனையும் காட்டப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் வெங்கடேசன் நடத்தினார். காலை 6.45 மணி வரை சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்ததை பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினம் காலை 6.20 மணி முதல் 6.45 மணி வரை இந்த நிகழ்வு நடப்பதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்வார்கள்.

இது குறித்து தென்னிந்திய புரோகிதர் சங்க வேலூர் நகர இணை செயலாளர் குமார் கூறுகையில் “இதேபோன்று தட்சிணாயன காலத்தில் செப்டம்பர் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை இதேபோன்ற நிகழ்வு நடக்கிறது. லிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை சூரியனே லிங்கத்தை தரிசிப்பதாக கருதப்படுகிறது. இந்த நாளில் அருஞ்சிகை ஈஸ்வரரை தரிசிப்பது அதிக நன்மைகளை தரும். 1000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிகழ்வில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்” என்றார். இந்த கோவில் தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

Similar News