ஆன்மிகம்
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை நடைபெறும் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

சமயபுரத்தில் 5-ந்தேதி போஜீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது

Published On 2017-03-02 07:52 GMT   |   Update On 2017-03-02 07:52 GMT
சமயபுரத்தில் உள்ள ஆனந்தவள்ளி உடனுறை போஜீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலை சேர்ந்தது ஆனந்தவள்ளி உடனுறை போஜீஸ்வரர் கோவிலாகும். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டுச்சந்தை அருகே இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுவாமியின் தனிச்சிறப்பு சுவாமி பானத்தில் 16 பட்டைகள் (முகங்கள்) உள்ளன.

இதுவே, பதினாறு செல்வங்களாக சுவாமி மீது அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்களில் விரதம் இருந்து கோவிலின் முன்பு உள்ள பலி பீடத்தின் முன்பு இலுப்்பை எண்ணையால் ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் பெரும் செல்வமும், கடன் நிவர்த்தியும், அமைதியான மனநிலையும் கிடைக்கும் என்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற போஜீஸ்வரருக்கு புதிதாக பிரகாரங்கள் அமைக்கப்பட்டு புதிய விநாயகர், சண்முகர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சன்னதியும், நந்தி மண்டபம் மற்றும் சுவாமி விமானம், அம்மன் விமானம் ஆகியவைகள் புதுப்பிக்கப்பட்டு பஞ்சவர்ணம் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 5-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

இன்று முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் இதற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான தென்னரசு, மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.

Similar News