ஆன்மிகம்

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம் 4-ந்தேதி நடக்கிறது

Published On 2017-03-01 04:44 GMT   |   Update On 2017-03-01 04:44 GMT
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி மாதம் 20-ந் தேதியை அய்யா வழி மக்கள் வைகுண்டர் சாமியின் அவதார தின விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த அவதார தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு மாசி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அவதார தின மாசி ஊர்வலம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது.

அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினத்திற்கு முந்தைய தினமான 3-ந் தேதி காலை அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பதியில் இருந்து சாமி தோப்பை நோக்கி வாகன பேரணி புறப்படுகிறது. காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வாகன பேரணி உடன்குடி, சீர் காய்ச்சி, திசையன்விளை, கூடங்குளம், செட்டிக்குளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜ கோவில் திடலை வந்தடைகிறது.

அதே தினம் மதியம் 2 மணிக்கு அய்யா வைகுண்டசாமி சிறை வைக்கப்பட்ட திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பில் அமைந்துள்ள பத்மநாபசாமி கோவில் வடக்கு நடையில் இருந்து மற்றொரு வாகன பவனி சாமிதோப்பு நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருவனந்தபுரம் பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.



தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி முன்பிருந்து ஆதலவிளைக்கு ஜோதி ஓட்டம் மூலம் தீபம் கொண்டு செல்லப்படும். மாலை 6 மணிக்கு ஆதலவிளை மலையில் வைகுண்டர் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

அன்று, இரவு 10 மணிக்கு நாகராஜா கோவில் கலையரங்கில் மாசி மாநாடும், அய்யாவழி அறிஞர்களின் சமய உரை, கலை நிகழ்ச்சிகள், அய்யாவழி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

வைகுண்ட சாமியின் அவதாரதினமான 4-ந் தேதிகாலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பு நோக்கி ஊர்வலம் புறப்படுகிறது. அகிலத்திரட்டை தாங்கிய வாகனமும், முத்துகுடைகளும் பலவகையான மேளதாளங்களுடன் செல்கிறது.

ஊர்வலம் கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலம் செல்லும் வழியில் பல மதங்களை சார்ந்தவர்களும், அய்யா வழி பக்தர்களும் வரவேற்பு கொடுக்கின்றனர்.

Similar News