ஆன்மிகம்
நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞான பிரசுனாம்பிகை தாயாரும் அருள்பாலித்த காட்சி.

பிரம்மோற்சவ விழா 8-வது நாள்: அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஊர்வலம்

Published On 2017-02-27 07:27 GMT   |   Update On 2017-02-27 07:27 GMT
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்திலும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று பகல் 11 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வாகன ஊர்வலத்துக்கு முன்னால் கேரள செண்டை மேளம், கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயில் ஆட்டம், நாட்டுப்புற நடனம் மற்றும் காளி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடி வந்தனர். முன்னதாக உற்சவ மூர்த்திகளை அலங்கார மண்டபத்துக்கு அழைத்துச்சென்று அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது.

ஊர்வலத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் குருவய்யநாயுடு, நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.



அதைத்தொடர்ந்து இரவு 10 மணியில் இருந்து 11.30 மணிவரை வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், வெள்ளி சிம்ம வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் மணக்கோலத்தில் எழுந்தருளி அலங்கார மண்டபத்தில் இருந்து கோவில் அருகில் உள்ள சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானபிரசுனாம்பிகை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு வெள்ளித்தட்டுகளில் பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை தலையில் சுமந்தபடி நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இருந்து அலங்காரம் மண்டபம் வரை ஊர்வலமாக வந்து கோவிலின் பிரதான அர்ச்சகர் சம்பந்தம் குருக்களிடம் வழங்கினர்.

Similar News