ஆன்மிகம்
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியையொட்டி சிவலிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்த பக்தர்களை காணலாம்.

சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி கோலாகலம்

Published On 2017-02-25 03:07 GMT   |   Update On 2017-02-25 03:07 GMT
சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை, சிவனை பூஜித்து வணங்கிய நாளையே இந்துக்கள் சிவராத்திரி விழாவாக கொண்டாடி வருகின்றனர். மகா சிவராத்திரியையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வெள்ளஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், பாமன் குமரகுருதாசசாமிகள் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சாமி, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், பாடி திருவலிதாயம், பாடியநல்லூர் திருநிற்றீஸ்வரர் கோவில், பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர், மல்லீஸ்வரர், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவில், அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில், குன்றத்தூர் நாகேஸ்வரசாமி, தியாகராயநகர் சிவ-விஷ்ணு கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூக்களையும், வில்வம் இலைகளையும் வாங்கிவந்து, இறைவனுக்கு பூஜை பொருளாக கொடுத்தனர். பலரும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிவலிங்கத்திற்கு வில்வம் இலையுடன், பால் அபிஷேகம் செய்து பக்தியுடன் வணங்கினர்.



அப்போது அவர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என்று பக்தி முழக்கமிட்டனர். மாலையில் அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அனைத்து சிவன் கோவில்களிலும் 4 கால பூஜைகள் நடந்தது. முதல் கால பூஜை இரவு 7 மணிக்கு தொடங்கியது.

ஒவ்வொரு கால பூஜையின் போதும் இறைவனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டது. ஒவ்வொரு கால பூஜையின் முடிவிலும் பக்தர்களுக்கு புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம், கற்கண்டு பால் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

4 கால பூஜைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடந்த லிங்கோற்பவ கால பூஜை சிறப்புக்குரியது என்பதால் பக்தர்கள் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் மரத்தடுப்புகளால் பாதை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சிவ அன்பர்கள் ஞானசம்பந்தரின் கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற்புராணம், பெரியபுராணம் புத்தகங்களை வழங்கினர்.

Similar News