ஆன்மிகம்
வெள்ளனூரில் அழகுநாச்சியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.(உள்படம்: அழகுநாச்சியம்மன்)

வெள்ளனூரில் அழகுநாச்சியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2017-02-23 07:54 GMT   |   Update On 2017-02-23 07:54 GMT
வெள்ளனூரில் அழகுநாச்சியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அன்னவாசல் ஒன்றியம் நார்த்தாமலை அருகே உள்ள வெள்ளனூரில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதில் இருந்து தொடர்ச்சியாக மண்டகப்படிதாரர்களின் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மண்டகப்படி நாட்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் அழகுநாச்சியம்மன் சிறப்பு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தேரில் அழகுநாச்சியம்மனை எழுந்தருள செய்தனர். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் காப்பு அவிழ்க்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை வெள்ளனூர் பொதுமக்கள், விழா குழுவினர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளனூர் போலீசார் செய்திருந்தனர்.

Similar News