ஆன்மிகம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா தொடங்கியது

Published On 2017-02-20 08:16 GMT   |   Update On 2017-02-20 08:16 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கடலூர் கெடிலம் நதிக்கரையில் இருந்து மேளதாள இசையுடன் கரகம் புறப்பாடு நடைபெற்று லாரன்ஸ்சாலை, வண்டிப்பாளையம் சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் மாலை 6 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அறங்காவலர் ஆர்.பி.நாகராஜ் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

விழாவின் 2-வது நாளான இன்று(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு அம்மன் வீதி உலாவும், நாளை(செவ்வாய்க்கிழமை) 3 முகம் இருளகண்டனுடன் அம்மன் வீதி உலாவும், 23-ந் தேதி அக்னி கரகத்துடன் அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், 24-ந் தேதி மாலையில் திருக்கல்யாணமும், இரவில் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், தாண்டவராயர் ரிஷப வாகனத்தில் பரிவேட்டை மற்றும் வீதி உலா நடக்கிறது.

பின்னர் 25-ந் தேதி அம்மன் குறத்தி வேடம் பூண்டு மயானம் சென்று வல்லாளக்கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சியும், இரவில் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை வருகிற 26-ந் தேதி மதியம் 11.30 மணிக்கு நடக்கிறது.

Similar News