ஆன்மிகம்
பல்லக்கில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை தெப்பத்திற்கு கொண்டு சென்ற போது எடுத்தபடம்.

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2017-02-16 06:55 GMT   |   Update On 2017-02-16 06:55 GMT
காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நந்தவன தோட்டத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 1 -ந் தேதி தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்தது. அதன்பின்னர் தினமும் பல்வேறு சமூக மக்களின் மண்டப கட்டளை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பல்லக்கில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். பின்னர் பல்லக்கை பக்தர்கள் அங்கிருந்து தெப்பம் உள்ள நந்தவன தோட்டத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன்பின்னர் அங்குள்ள தெப்பக்குளத்தை சுற்றி சாமி வலம் வந்தார். பின்னர் தெப்ப குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் கடைசி நாளான வருகிற 19-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு செல்கிறார்.

Similar News