ஆன்மிகம்

சங்கரரது பாசுரங்களுக்கு சாந்தமான மூகாம்பிகை

Published On 2017-01-21 09:34 GMT   |   Update On 2017-01-21 09:34 GMT
மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகா சீற்றம் குறையாமல் உக்கிர தேவதையாகவே இருந்தாள். சங்கரர் பாடிய பாசுரங்களால் மூகாம்பிகா தேவி சாந்த ரூபினியாக மாறினாள்.
ஆதிசங்கரர் யாத்திரையை தொடங்கியதும் பல இடங்களுக்கும் சென்று அத்வைத போதனைகளைச் செய்து பின் கொல்லூருக்கு வந்தார். கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாக்த மதத்தைப் பின்பற்றி வந்தனர்.

கொல்லூரில் தாய் மூகாம்பிகா தேவி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இங்கு உறைந்திருக்கும் மூகாம்பிகா ஒரு காலத்தில் மிகவும் உக்கிரமாக இருந்தாள். அவளை ஆதிசங்கரர் தான் சாந்தமாக மாற்றினார். அது தொடர்பான வரலாறு வருமாறு:-

மூகாசுரன் என்றொரு அசுரன் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்கும் பொருட்டு லோகமாதா பராசக்தியானவள் சிம்மவாகனத்தில் வந்து அவனோடு போரிட்டு மூகாசுரனை வதம் செய்தாள். இறுதியில் மூகாசுரன் கேட்டுக் கொண்டதன்படி அவன் பெயரிலேயே மூகாம்பிகா என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறாள் என்பது புராணம் கூறும் செய்தி.

வேதவித்தகராம் சங்கரர் கொல்லூருக்கு வந்தார். அங்கே சாக்தர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் ஒரு சிறுவன் இறந்துவிட்டான். அச்சிறுவனின் பெற்றோர் அவன் உடல் முன்னர் கதறியழுதபடியே இருந்தார்கள்.

சங்கரர் அச்சிறுவனின் உடல் அருகில் சென்று அவன் இதயத்தைத் தொட அவன் இதயம் துடிக்க ஆரம்பித்தது. சிறுவன் உயிர் பிழைத்தான். இதைக் கண்ட அச்சிறுவனது பெற்றோரும் மற்ற சாக்தர்களும் சங்கரரை வணங்கி அவரின் வேதமார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்.

மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகா சீற்றம் குறையாமல் உக்கிர தேவதையாகவே இருந்தாள். சங்கரர் மூகாம்பிகையை வணங்கி அங்கே ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பின் தேவியின் மனம் குளிரும்படி பாசுரங்கள் பல பாடினார். மூகாம்பிகா தேவி உக்கிர நிலையிலிருந்து குளிர்ந்து சாந்த ரூபினியாகக் காட்சி தந்தாள். சங்கரரது பாசுரங்களுக்கு அந்த அம்பிகையே குளிர்ந்தாள் என்றால் மனிதர்கள் எம்மாத்திரம்.

இவ்வாறு தான் சென்ற இடங்களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களுக்கு ஞானத்தையும் அத்வைத மார்க்கத்தையும் கற்றுத் தந்தார் சங்கரர்.

Similar News