ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம்

Published On 2017-01-18 03:16 GMT   |   Update On 2017-01-18 03:16 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான நேற்று தை உத்திர வருசாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்துக்கும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் கோவில் விமான தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.

காலை 9.05 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமானங்களுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல், புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Similar News