ஆன்மிகம்
பாரத மாதா கோவில் கோபுரத்தில் கலசங்கள் பொருத்தப்பட்ட காட்சி.

கன்னியாகுமரி பாரத மாதா கோவில் கோபுரத்தில் 12 கலசங்கள் பொருத்தப்பட்டன

Published On 2016-11-29 05:55 GMT   |   Update On 2016-11-29 05:56 GMT
கன்னியாகுமரி பாரதமாதா கோவில் கோபுரத்தில் 12 கலசங்கள் விசேஷ பூஜைகள் நடத்தி பொருத்தப்பட்டன.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் ரூ.25 கோடி செலவில் ராமாயண தரிசன கண்காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி கூடத்தின் முன்பு 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

மேலும் கண்காட்சி கூடத்தில் மேல் தளத்தில் 10 அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட பாரத மாதா சிலையும், ராமாயண காட்சிகளை விளக்கும் 108 மூலகை ஓவியங்கள் காண்காட்சி கூடத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து திறப்பு விழாக்கு தயாராக உள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 10, 25, 26, 27- ந்தேதிகள் அல்லது ஜனவரி 1-ந்தேதி ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் திறப்பு விழாவை நடத்த அனுமதி கேட்டு உள்ளனர்.

இந்நிலையில் பாரதமாதா கோவில் மேல் கோபுரத்தில் 3 அடி உயரத்தில் 7 செம்பு கலசங்கள் பொருத்தும் பணியும், கீழ் கோபுரத்தில் 1½ அடி உயரத்தில் 5 சிறிய கலசங்கள் பொருத்தும் பணியும் நேற்று நடந்தது. முன்னதாக இந்த கலசங்களில் வரகு மற்றும் நவதானியங்கள் நிரப்பி வேதவிற்பனர்கள் மூலம் விசேஷ பூஜையும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாக செயலர் மற்றும் பொருளாளர் அனுமந்த்ராவ், கேந்திர மூத்த ஆயுட்கால உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கேந்திர தலைமை அலுவலக செயலாளர் ரகுநாதன் நாயர், இணை செயலாளர் பிரவீன் தபோல்கர், கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் ஐயப்பன், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மாநாபன், வளாக மேலாளர் பாலகிருஷ்ணன், எஸ்.சி.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிர்வாக இயக்குனர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News