ஆன்மிகம்

அழகர்மலை உச்சியில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக நெய் வழங்கலாம்

Published On 2016-11-29 05:51 GMT   |   Update On 2016-11-29 05:51 GMT
அழகர்மலை உச்சியில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபத்துக்கு, பக்தர்கள் காணிக்கையாக நெய் வழங்கலாம் என்று கள்ளழகர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று திருக்கார்த்திகை நெய் தீபம் ஏற்றுவது இந்த கோவிலில் தனி சிறப்பாகும். இந்த ஆண்டு, அடுத்த மாதம்(டிசம்பர்) 13-ந் தேதி பவுர்ணமி தினத்தன்று திருக்கார்த்திகை திருவிழா நடைபெறுகிறது.

அன்று மாலையில் அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை கோம்பை தளத்தில் ஏற்கனவே தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் நெய் தீபகுண்டம் ஏற்றப்படும். முன்னதாக அன்றைய தினம் அழகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காலை முதல் மாலை வரை கார்த்திகை விரதம் மேற்கொள்கின்றனர்.

பின்னர் வெள்ளிமலை கோம்பைதளத்தில் ஏற்றப்படும் நெய் தீபகுண்டத்தை பார்த்து தரிசனம் செய்து விரதத்தை முடித்து கொள்வார்கள். மலையடிவாரத்தில் உள்ள அழகர்கோவில் வளாகம், சுற்றுச்சுவர், பிரகாரம் ஆகியவற்றில் தீபங்கள் ஏற்றப்படும். இதுதவிர 18-ம் படி கருப்பணசாமி கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்படும்.

முன்னதாக கள்ளழகர், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவியருக்கும், கருப்பணசுவாமிக்கும், துணைக்கோவில் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அழகர்மலை உச்சியில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபத்துக்கு பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக நெய் வரவேற்கப்படுகிறது என்றும், இதற்காக நெய் வழங்க விருப்பம் உள்ள பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள உள்துறை மேலாளர் அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News