ஆன்மிகம்

தன்னலம் கருதாது உதவ வேண்டும் - ஆன்மிக கதை

Published On 2016-11-25 09:06 GMT   |   Update On 2016-11-25 09:07 GMT
மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதை உணர்த்தும் கதையை பார்க்கலாம்.
‘படகு நீரில் மிதக்கலாம். ஆனால் படகுக்குள் நீர் நுழைந்துவிடக்கூடாது. அதுபோல, மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் நுழைந்து விடக்கூடாது’

- ராமகிருஷ்ணர்.

இரண்டு இளைஞர்கள் காசியில் உள்ள இறைவனை வழிபடுவதற்காக சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் ஆன்மிகத் தேடலில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பினர். ஆகையால் பல ஸ்தல யாத்திரை செய்து, இறுதியாக காசிக்கு வந்திருந்தனர். காசியில் உள்ள தீர்த்தத்தில் நீராடுவதற்காக இளைஞர்கள் இருவரும் சென்றனர். அப்போது இரண்டு இளம்பெண்கள், தண்ணீரில் மூழ்கும் நிலையில் இருந்ததைக் கண்டனர்.

அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, இரண்டு இளைஞர்களும், உடனடியாக தண்ணீரில் குதித்தனர். மூழ்கும் தருவாயில் இருந்த இரு பெண்களையும் ஆளுக்கு ஒருவராக காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். காப்பாற்றப்பட்ட இரண்டு பெண்களும், இளைஞர்களுக்கு தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.

அப்போது இளைஞர்களில் ஒருவன், தான் காப்பாற்றிய பெண்ணிடம், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினான். அவன் ‘இந்த உலகமே உண்மை’ என்ற மனப்பான்மை கொண்டவன்.

மற்றொருவன் தன்னைவிட வயதில் முதிர்ந்த பெண்களை தாயாகவும், சம வயது கொண்டவர்களை சகோதரிகளாகவும், சிறுமிகளை புதல்வியாகவும் பாவித்து வாழ்ந்து பழகியவன். ஆகவே அவன் தான் காப்பாற்றிய பெண்ணிடம், ‘சகோதரி! ஒரு நல்ல காரியத்தைச் செய்ய இறைவன் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். நான் அந்தக் கடமையைச் செய்து முடித்தேன்’ என்று கூறினான். அவன் ‘இறைவன் மட்டுமே உண்மை’ என்ற மனப்பான்மை கொண்டவன்.

புறத்தளவில் இரண்டு இளைஞர்களும் ஓர் உயிரைக் காப்பாற்றுவது என்னும் ஒரே விதமான செயலைத்தான் செய்தனர். ஆனால் மனப்பான்மையில் இருவரும் வேறுபட்டவர்களாக இருந்தனர். அதன் காரணமாக, அவர்களுக்குக் கிடைத்த பலனும் வெவ்வேறாக அமைந்தது.

பலனை எதிர்பார்த்து செய்யும் செயல் பந்தத்துக்கு வழிவகுக்கும். ஆனால் தன்னை இறைவனின் கருவியாக பாவித்து செயல்புரிவதும், அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணிப்பதும் ஆன்ம விடுதலைக்கு வழிவகுக்கும். மேலும் ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களால் மட்டுமே, தூய முறையில் உலகிற்குத் தொண்டாற்ற முடியும். அப்படியில்லாமல் புறத்தளவில் ஆன்மிக வாழ்வு என்று கூறிவிட்டு, உள்ளத்தில் தனக்கான பலனை எதிர்பார்ப்பவர்களுக்குள் சுயநலம் புகுவதை தவிர்க்க முடியாது.

இதைத்தான் ‘கர்மம் செய்வதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு. கர்மத்தின் பயனில் ஒருபோதும் உரிமை பாராட்டாதே. பயனைக் கருதி கர்மம் செய்பவனாக இருக்காதே’ என்கிறது பகவத் கீதை.

- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News