ஆன்மிகம்

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டுமா?

Published On 2016-10-25 09:17 GMT   |   Update On 2016-10-25 09:17 GMT
காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன் என்பதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.
பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக பற்றோ அல்லது விருப்பமோ இருக்கக்கூடாது, எதன் மீதும் எந்த ஒரு ஆசையும் இன்றி இறைவன் ஒருவனையே மனதில் சதா தியானித்து இருக்க வேண்டும் என்பதற்காக உண்டான பழக்கம் இது.

பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழ்ந்து தன் இல்வாழ்க்கைக் கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர்கள் காசி, ராமேஸ்வரம் என தீர்த்த யாத்திரை மேற்கொள்வர். மோட்சகதியை வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்வோர் இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் புண்ணிய நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து ஆராதனை செய்வர்.

கங்கையில் ஸ்நானம் செய்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது நம்பிக்கை. கங்கையில் ஸ்நானம் செய்து புதுமனிதனாக வெளிவரும்போது எதன் மீதும் அதிகப் பற்று இருக்கக்கூடாது என்பதற்காக மிகவும் பிரியமான வஸ்துக்களை இனிமேல் உபயோகிப்பதில்லை என விட்டுவிடுவர்.

எனக்குப் பிரியமான கத்தரிக்காயை காசியில் விட்டுவிட்டேன், இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று பெருமை பேசுவதால் மட்டும் எந்தப் பலனும் கிடைத்துவிடாது. அதன் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்துவிடும். ‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’ என்ற வைரமுத்துவின் வரிகளை அனுபவத்தில் உணர முடியும்.

Similar News