ஆன்மிகம்

பெருமானார் அவர்களின் நற்பண்புகளும் அவர்களது திருமணமும்

Published On 2016-09-27 09:06 GMT   |   Update On 2016-09-27 09:06 GMT
குடும்பப் பெரியவர்களின் சம்மதத்தோடு முஹம்மது (ஸல்) - கதீஜா அவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை. அப்படியே நபி முஹம்மது (ஸல்) அவர்களும் வாலிபத்தின் தொடக்கத்தில் மக்காவாசிகளின் ஆடுகளைக் கூலிக்காக மேய்ப்பவராக இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் வணிகம் செய்யத் தொடங்கினார்கள். 

கதீஜா பின்த் குவைலித் அவர்கள் மிகத் திறமையான வியாபாரப் பெண்மணியாகத் திகழ்ந்தார்கள்.  நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்மையையும், நம்பகத்தன்மையையும் கேள்விப்பட்டு, தனது வணிகப் பொருட்களை சிரியாவிற்கு எடுத்துச் சென்று வணிகம் செய்ய வேண்டுமென்று கதீஜா அவர்கள் நபிகளாரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க முஹம்மது (ஸல்) அவர்களும் சிரியாவிற்குச் சென்று மிகச் சிறப்பாக வணிகம் செய்தார்கள். 

வணிகத்தின் போது முஹம்மது (ஸல்) வியாபாரத்தில் காட்டிய முனைப்பு, கண்ணியம், நேர்மை, வாய்மை என்று யாரிடமும் கண்டிராத நற்குணங்களைப் பற்றி அவர்களுடன் சென்றிருந்தவர்கள் கதீஜா அவர்களிடம் வந்து விவரித்தார்கள்.
 
கணவரை இழந்திருந்த கதீஜாவை பல குறைஷித் தலைவர்கள் மறுமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். அதையெல்லாம் மறுத்த கதீஜா, முஹம்மது (ஸல்) அவர்களின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு அவர்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி, தனது விருப்பத்தைத் தமது தோழி நஃபீஸாவிடம் சொல்லி அனுப்பினார்கள். 

பெரிய அளவில் வருவாயைச் சம்பாதித்து மக்கா திரும்பிய முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி எட்டியது. அறிவாற்றல் கொண்டவரான, நல்ல குடும்பப் பின்னணியுடையவரான மிகச்சிறந்த பெண்மணியான கதீஜாவை திருமணம் முடிக்கச் சம்மதம் தெரிவித்தார்கள். 

குடும்பப் பெரியவர்களின் சம்மதத்தோடு அவர்களுடைய திருமணம் நடைபெற்றது. அப்போது முஹம்மது (ஸல்) அவர்களின் வயது இருபத்தி-ஐந்து, கதீஜா (ரலி) அவர்களின் வயதோ நாற்பது. அவர்களின் திருமணத்திற்கு இரு குடும்பத்தின் சொந்தங்களும், அவர்களின் குலத்தவர்களின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

“உலகின் அன்றைய பெண்களிலேயே சிறந்தவர் இம்ரானின் மகள் மர்யம் ஆவார். இன்று உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் ஆவார்” என்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்ன குறிப்பு ஸஹீஹில் புகாரியில் வந்துள்ளது. 

(ஸஹீஹ் புகாரி 2:37:2262, ஸஹீஹ் முஸ்லிம் 44:4815, ஸஹீஹ் புகாரி 4:60:3432) 

- ஜெஸிலா பானு.

Similar News