ஆன்மிகம்

மகத்துவம் மிகுந்த மருதமலை

Published On 2016-09-26 08:17 GMT   |   Update On 2016-09-26 08:17 GMT
மருதமலை முருகனை கண்குளிரக் கண்டு மனம் உருக வணங்கி வழிபட்டால், எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பதில் ஐயமில்லை.
மருதமலை முருகையன், தன்னை நாடி வந்து அன்பு செய்யும் மெய்யன்பர்கட்கு மங்காத வாழ்வளிப்பவர் என்பது உலகறிந்த உண்மை. மருதமலைத் தலம் பழமைச் சிறப்புடையதேயாயினும்,  அண்மைக் காலத்திலேயே திருவருட் சிறப்பால் புகழ் மிக்க விளங்குகின்றது. எம்பெருமான் முருகனது ஐந்தாம்படை வீட்டுத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

இம்மருதமலை தலம், கோவை மாநகரத்திற்கு வடமேற்கில் ஏழு மைல் (11.2 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து இத்தலத்திற்கு மிகுதியாக பேருந்து வசதியுண்டு.

மருதமலை என்பது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் மலைத் தொடரின் சரிவில் அமைந்துள்ளது. மலைத் தொடரின் சரிவில் அமைந்த சமநிலப் பகுதியே மருதமலை என்று வழங்கப் பெற்று வருகின்றது. இச்சமநிலப் பகுதி சிறிய அளவிலேயே அமைந்துள்ளது. இச்சமநிலப் பகுதியிலேயே முருகப்பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளித் திகழ்கின்றார். முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள சமநிலப் பகுதி, நிலமட்டத்திலிருந்து சுமார் 500 அடி (150 மீ.) உயரத்தில் அமைந்துள்ளது.

முருகப்பெருமான் மருதமலையில் எழுந்தருளியதால், ‘மருதமலையான்’ என்னும் திருப்பெயர் பெற்றார். இத்தலம் பழமைச் சிறப்புடையது என்பதை, திருமுருகன் பூண்டிக் கோயில் கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது. அக்கோயில் கல்வெட்டுக்களில் “மருதமலை நாயகன் குலோத்துங்க சோழன்” என்றும், “மருதமலையனான குலோத்துங்க சோழ விக்கிரமாதித்தியதேவன்” என்றும் கூறப்பட்டுள்ளன. 

இவற்றினின்று மருதமலையின் பெயரை மக்கள் தமக்கு இட்டு வழங்கி வந்துள்ளனர் என்பது தெரிகின்றது. மக்கள் இம்மலையின் பெயரைத் தமக்கு இட்டு வழங்கினார்கள் எனில் இம்மலை தலம் அதற்கு முன்பிருந்தே சிறப்புற்று விளங்கி வந்திருக்கின்றமை புலனாகின்றது.

இக்கல்வெட்டுகளின் காலம் இன்றைக்கு 800 ஆண்டுகட்டு முற்பட்டவையாகும். எனவே, இம்மலை தலத்தின் பழமை நன்கு விளங்கும். இம்மலைத் தலத்தில் தேவர்கள் தவம் புரிந்தனர் என்று திருப்போரூர் புராணம் கூறுகின்றது. இம்மருதமலை மீது முருகப்பெருமான் எழுந்தருளித் திகழும் திருக்கோவில், மலையால் சூழப்பெற்று காண்போர் உள்ளத்தை கவரும் பான்மையதாக திகழ்கின்றது. இம்மலை கோவிலுக்கு செல்வதற்கு படிக்கட்டு பாதை, கார் பாதை என இருவகை பாதைகள் இடப்பட்டுள்ளன.

மலையடி வாரத்தில் படிக்கட்டு பாதை தொடக்கத்தின் அருகில் தான் தோன்றி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இவ்விநாயகரின் இயற்கை அமைப்பு மிகவும் வனப்புடையதாக திகழ்கின்றது. இந்த விநாயகரின் தோற்ற பொலிவை பிறதலங்களில் காண்பது அரிது.
படிக்கட்டு பாதையில் செல்வோர் இளைப்பாறுவதற்கு என்று இடையிடையே மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டு பாதையின் உச்சியை அடைந்தவுடன் எம்பெருமான் திருக்கோவில் எதிர்கொண்டு விளங்குகின்றது.

இத்திருக் கோவில் ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ளது. பிரகாரத்தில் சுற்றுச் சுவர்கள் அமைக்கப்பெறாமல், திறந்த வெளியாக இருந்தாலும் மலையின் இயற்கையமைப்பு சுவர்போல் அமைந்து விளங்குகின்றது. திருக்கோவிலின் முன்னர் மருத தீர்த்தம் உள்ளது. இதன் அருகில் இத்தலத்துப் புனித மரமாகிய மருதமரம் காணப்படுகின்றது. 

இம்மரத்தின் கீழாகத்தான் மருத தீர்த்தம் அமைந்துள்ளது. இக்கோவில் மகாமண்டபம், அர்த்தம் மண்டபம், கருவறை முறையிலேயே அமைந்து விளங்குகின்றது. கருவறையில் எம்பெருமான் முருகக்கடவுள் தண்டாயுதபாணியாக நின்று அன்பர்கட்கு திருவருள் புரிந்து திகழ்கின்றார். 

Similar News