ஆன்மிகம்

விதவை கோலத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வினோத வழிபாடு

Published On 2016-05-25 05:14 GMT   |   Update On 2016-05-25 05:14 GMT
தலைவாசல் அருகே நல்லசேவன் கோவிலில் விதவை கோலத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பூசாரி ரத்தச்சோறு வழங்கினார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நத்தக்கரை கிராமத்தில் வசிஷ்டநதிக்கரை ஓரத்தில் நல்லசேவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருவது வழக்கம்.

நத்தக்கரை கிராமத்தில் அண்ணன், தம்பி என 7 பேர், வானகோவராயன் மன்னரிடம் தளபதிகளாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 7 பேரும் இரவில் வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்ததாகவும், இவர்கள் வேட்டைக்கு சென்று திரும்பும்போது, மனைவிகள் வாசலில் நின்று வரவேற்பது வழக்கமாம்.

இவர்கள் 7 பேரில் கடைக்குட்டியாக இருந்தவர் நல்லசேவன். ஒருநாள் வேட்டைக்கு சென்று திரும்பிய போது இவரை வரவேற்க அவரது மனைவி வாசலுக்கு வரவில்லை. இதனால் கோபமடைந்த நல்லசேவன் கர்ப்பிணி மனைவியை வசிஷ்டநதிக்கரையோரம் அழைத்து சென்று மடியில் படுக்க வைத்து தனது கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தனது குழந்தையை வெளியே வைத்துவிட்டு தானும் இறந்து விடுகிறார். இதையடுத்து இறந்த 2 பேரின் ரத்தமும் வசிஷ்டநதியில் ரத்த ஆறாக ஓடியதாம். இதை பகலில் பார்த்த கிராம மக்கள் அவர்கள் இறந்து கிடந்த அந்த பகுதியை நல்லசேவன் கோவிலாக அழைத்து நல்லசேவனை கிராம காவல் தெய்வமாக வணங்கி வருவதை ஐதீகமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, திருமணம் ஆன பெண்கள் வெள்ளை சேலை அணிந்து, வளையல் மற்றும் மூக்குத்தி, தோடு அணியாமல், பொட்டு வைக்காமல் விதவை கோலத்தில் சாமிக்கு தேவையான பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து நத்தக்கரை வசிஷ்டநதிகரையில் உள்ள நல்லசேவன் கோவிலில் நேற்று அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு முன்பு அந்த பெண்கள் பொங்கல் வைத்தனர்.

பின்னர், நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலியிட்டு மாவிளக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும், குழந்தை பாக்கியம் வேண்டி மடி பிச்சை ஏந்தி பெண்கள் ரத்தச்சோறு வாங்கி சாப்பிட்டனர். கோவில் பூசாரி பெண்களுக்கு ரத்தச்சோறு வழங்கினார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், ரத்தச்சோறு சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேசமயம், குழந்தை பாக்கியம் கிடைத்த பெண்கள், கோவில் வளாகத்தில் குழந்தை சிலைகளை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும், திருமணம் ஆகாத பெண்கள் கோவில் வழிபாட்டில் கலந்து கொள்வதன் மூலம் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்றும், பெண்கள் விதவை கோலத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வதால் குடும்பம் வளர்ச்சி அடைவதாகவும், குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நோடியில்லாமல் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த வினோத வழிபாடு நடந்த திருவிழாவில் நத்தக்கரை, பெரியேரி, மட்டியகுறிச்சி, வாலிகண்டாபுரம், தென்பொன்பரப்பி, ஆயில்பட்டி உள்பட பல்வேறு கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Similar News