ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2016-04-15 02:10 GMT   |   Update On 2016-04-15 02:10 GMT
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில் உள்பிரகாரத்தில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் கலையரங்கில் கோவில் பொது விவர குறிப்பேடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அலுவலக கண்காணிப்பாளர் சங்கர் பொது விவர குறிப்பேட்டை வெளியிட, அதனை கோவில் முதுநிலை கணக்காளர் பட்டுராஜன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Similar News