ஆன்மிகம்
பாபநாசசுவாமி உடனுறை உலகாம்பிகை அம்மன் கோவில்

பாபநாசம், குற்றாலம் கோவில்களில் சித்திரை விசு திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2016-04-04 02:10 GMT   |   Update On 2016-04-04 02:10 GMT
பாபநாசம், குற்றாலம் கோவில்களில் சித்திரை விசு திருவிழா நாளை தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி நதிக்கரையில் பாபநாசசுவாமி உடனுறை உலகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆண்டு தோறும் சித்திரை விசு திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவுக்கு பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. முதல் 10 நாட்களுக்கு 10 சமுதாயங்களுக்குச் சொந்தமான மண்டகப்படிகளுக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளல் மற்றும் இரவில் வீதி உலா நடைபெறும்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி விக்கிரமசிங்கபுரத்தில் நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சியாக 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று காலையில் தீர்த்தவாரி நடைபெறும்.

இரவு தெப்ப உற்சவமும், நள்ளிரவில் கோவில் வளாகத்தில் தமிழ் மாமுனிவர் அகஸ்தியருக்கு சிவபெருமான் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் காட்சி அளித்தலும் நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசுவரன் தலைமையில் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விசு திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை விசு திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடிஏற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.

திருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இரவில் சுவாமி அம்பாள் வீதி உலா நடக்கிறது. 8-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 9-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.

11-ந் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 7 மணிக்கும் நடராஜ மூர்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், பச்சை சாத்தி தாண்டவ தீபாராத¬யும் நடக்கிறது.

14-ந் தேதி காலை 10.40 மணிக்கு சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Similar News