ஆன்மிகம்

கஷ்டங்களைப் போக்கும் கவுரி அம்மன் விரதம்

Published On 2017-04-28 10:06 GMT   |   Update On 2017-04-28 10:06 GMT
கேதாரம் என்பது சிவனையும், கவுரி என்பது பார்வதியையும் குறிக்கும். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால் இது ‘கேதார கவுரி விரதம்’ என அழைக்கப்பட்டது.
பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். ‘கேதார கவுரி விரதம்’ என்று ஒன்று இருக்கிறது. இதில் கேதாரம் என்பது சிவனையும், கவுரி என்பது பார்வதியையும் குறிக்கும். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால் இது ‘கேதார கவுரி விரதம்’ என அழைக்கப்பட்டது.

ஞான கவுரி :

ஒரு முறை, சிவத்தை விட சக்தியே சிறந்தது என்று பார்வதிதேவி எண்ணினாள். இதனால் சிவன் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. இதைக் கண்ட பார்வதி தேவி, உலகில் சக்தி மட்டும் போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். இதையடுத்து அன்னையை தன்னுடைய உடலில் சரி பாதியாக சேர்த்து அறிவின் அரசியாக்கினார். அன்னை ஞான கவுரியானாள். இந்த ஞான கவுரியை, பிரம்மன் கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிபட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’, ‘கவுரி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கிறாள்.

சுமித்ரா கவுரி :

உலக உயிர்களின் சிறந்த நண்பன், இறைவனே. சுந்தரரின் தோழனாக ஈசன் அருள்பாலித்ததும், இறைவன் நடத்திய திருவிளையாடல்களுமே இதற்கு சாட்சியம் கூறும். ஈசனைப் போலவே உலக உயிர்களின் தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என்று போற்றுகின்றன புராணங்கள். திருவாடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்கிறார்கள். இந்த கவுரியை விரதமிருந்து வழிபட்டால் நல்ல விதமான நட்பும், சுற்றமும் வாய்க்கும்.



சுயம் கவுரி :

சிவபெருமானை, மணமகனாக மனதில் நினைத்தபடி நடந்து செல்லும் கோலத்தில் அருள்கிறாள், இந்த கவுரி தேவி. திருமணத் தடையால் வருந்துபவர்கள், சுயம் கவுரி தேவியை விரதமிருந்து வழிபடலாம். ருக்மணி, சீதை, சாவித்திரி போன்ற புராண கால பெண்களின் கவுரி பூஜை, இந்த அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தக்கூடியவை. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை ‘சாவித்திரி கவுரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

சத்யவீர கவுரி :

இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். பலரும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதையும் நாம் காண்கிறோம். அதற்கு நல்ல மனமும் அவசியமானது. அத்தகைய மனப்பாங்கை அருள்பவளே ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்கின்றனர்.
Tags:    

Similar News