ஆன்மிகம்

நாகதோஷம் உள்ளவர்களுக்கான சிறந்த பரிகார தலம்

Published On 2016-12-28 05:52 GMT   |   Update On 2016-12-28 05:52 GMT
இந்த கோவிலில் ராகு காலத்தில் பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர்.
நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்குவது, திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோவில். ராகுபகவான் சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் இது. நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்குவது, திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோவில். ராகுபகவான் சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் இது. ராகு பூஜை செய்ததால் இத்தலத்திற்கு ‘திருநாகேஸ்வரம்’ என்ற பெயர் வந்தது.

நாகநாதர் கோவில் வெளிப்பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு பகவான், தனது இரு தேவிகளான நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் ஐந்தலை அரவு எனும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால், பால் நீலநிறமாக மாறுவது இங்கு தனிச் சிறப்பாகும். இதை பக்தர்கள் கண்ணார கண்டு வழிபடலாம்.

ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் ராகுபகவான் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.

இத்திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர்.

நாகதோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம் இதுவே ஆகும். காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இறங்கி, பஸ், ஆட்டோ மூலமாக நாகநாதர் கோவிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து நாகநாதர் கோவிலுக்குச் செல்ல அடிக்கடி நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Similar News