சினிமா

சல்மான்கானை கொல்ல திட்டம் - தாதா பரபரப்பு தகவல்

Published On 2018-06-10 11:27 GMT   |   Update On 2018-06-10 11:27 GMT
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொல்ல திட்டமிட்டதாக பிரபல தாதா சம்பத் நெக்ரா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். #Salmankhan
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை மான்களை வேட்டையாடிய குற்றத்துக்கு அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்.

மான் வேட்டையாடியது குறித்து பிஷ்னாய் என்னும் இன மக்கள் புகார் அளித்தனர். அந்த இனத்தை சேர்ந்தவர்கள் நடிகர் சல்மான்கான் தங்களுக்கு விரோதி என்று கூறி வந்தனர்.

அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கடந்த ஜனவரி மாதம் சல்மான்கானை கொல்வோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்து இருந்தார். இந்த நிலையில் சல்மான் கானை கொல்ல சதி நடந்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

சல்மான்கானை கொல்ல திட்டமிட்டதாக பிரபல தாதா சம்பத் நெக்ரா கைது செய்யப்பட்டான். அரியானா சிறப்பு படை போலீசார் அவனை கைது செய்தனர். லாரன்ஸ் பிஷ்னாயிடம் வேலை பார்த்தவன் சம்பத் நெக்ரா. துப்பாக்கியால் குறி பார்த்து சுடுவதில் திறமையானவன்.

அரியானா மாநில அரசியல் தலைவர் ஒருவரை கொல்ல முயன்றதாகவும், ஒரு தொழில் அதிபரை கடத்தி ரூ. 3 கோடி பணம் பறித்ததாகவும் லாரன்ஸ் பிஷ்னாய் ஆட்கள் மீது வழக்கு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6-ந் தேதி சம்பத் நெக்ராவை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட சம்பத் நெக்ரா நடிகர் சல்மான்கானை கொல்ல திட்டமிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.



இது தொடர்பாக அரியானா சிறப்பு படை போலீசார் கூறியதாவது:-

அரிய வகை மான் வேட்டையாடிய வழக்கு தொடர்பாக சல்மான்கானை கொல்ல போவதாக லாரன்ஸ் பிஷ்னாய் மிரட்டல் விடுத்து இருந்தான்.

இதற்காக அவனது கூட்டத்தை சேர்ந்த தாதா சம்பத் நெக்ரா கடந்த ஜனவரி மாதம் சல்மான் கான் வீட்டை ரசிகர் என்ற போர்வையில் சென்று பார்த்து இருக்கிறான்.

திட்டத்தை முடித்து விட்டு இந்தியாவை விட்டு வெளியேறவும் முடிவு செய்து இருந்தான். தப்பிக்க அங்கே சரியான வழி இல்லாததால் கொலை திட்டத்தை நிறைவேற்ற வில்லை. சம்பத் நெக்ரா எங்களிடம் அளித்த வாக்கு மூலத்தில் இதை தெரிவித்து உள்ளான்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

சல்மான்கானை கொல்ல திட்டமிடப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News