சினிமா

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தாக்கி அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா

Published On 2018-05-07 14:15 GMT   |   Update On 2018-05-07 14:15 GMT
திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்று சொன்னார்கள். சமீபகாலமாக, சில தரங்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது என்று பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். #BharathiRaja #IAMK
சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பல் வெளியாகி திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத்திற்கு இயக்குநர் பாராதிராஜா கடும் கண்டங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

“திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்று சொன்னார்கள். சமீபகாலமாக, சில தரங்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. 

இலக்கியமும், இதிகாசமும், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள் இன்று, சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய திரைப்படங்கள் இன்று, இரட்டை அர்த்த வசனங்களால், மலிந்துபோய்க் கிடக்கின்றன. கொண்டாடிய வேண்டிய திரைப்படங்கள், இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறை காயாகச் சொல்லப்பட்ட விஷயங்களை, இன்று இலைபோட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை..



தமிழ் மக்களே! ரசனை மாற்றமென்று தரம்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதைப் புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடிக்கும் ஒரு திரைப்படம்.. நம் தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசைதிருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்சினைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. 

இவர்களுக்குத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் துணை போவதால் தான், ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன. காரணம், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும், ஏன் இதற்கு மேலேயும் நடக்கும்... இதற்கு ஒரு முடிவுகட்ட நாள் குறிக்க வேண்டும். இது ஒருபக்கம் இருக்கட்டும்.. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட `சென்சார் போர்டு' என்ன செய்து கொண்டிருக்கிறது? 



சரியான விஷயங்களுக்குக் கூட கத்திரி போட்ட நீங்கள், சமீப காலமாக ஆபாசப் படங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? எவ்வளவோ காலங்களாய் அடங்கிக் கிடந்த தமிழ் இனம், தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டு வீறுகொண்டு நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும்போது, எங்களை பலவீனப்படுத்த நீங்கள் செய்யும் சூழ்ச்சியோ என்றுகூட சந்தேகப்படுகிறேன். ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே... நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர்!! பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.

`திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல... அது எழுதப்பட்ட வாழ்க்கை' என்பதை உணருங்கள்... மத்திய தணிக்கைக் குழு அதிகாரிகளே! இரண்டாம் தரமான படைப்புகளை மறு பரிசீலனை செய்யுங்கள்... இல்லையென்றால், `சென்சாரையே சென்சார்' செய்ய வேண்டிய நிலை ஏற்படும்” இவ்வாறு கூறியுள்ளார். #BharathiRaja #IAMK 

Tags:    

Similar News