சினிமா

ஜனாதிபதியிடம் விருது பெற முடியாதது ஏமாற்றம் - நடிகை பார்வதி பேட்டி

Published On 2018-05-04 09:34 GMT   |   Update On 2018-05-04 09:34 GMT
65-வது திரைப்பட தேசியவிருது வழங்கும் விழாவில் ஜனாதிபதியிடம் விருது பெற முடியாதது ஏமாற்றம் அளித்ததாக நடிகை பார்வதி மேனன் தெரிவித்துள்ளார். #NationalAwards2018 #ParvathyMenon
டெல்லியில் தேசிய சினிமா விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு சினிமா கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தேசிய விருதுகளை அனைத்து கலைஞர்களுக்கும் ஜனாதிபதி தனது கையால் வழங்குவது வழக்கம். இந்த முறை 12 விருதுகளை மட்டும் ஜனாதிபதி வழங்கினார். மற்ற கலைஞர்களுக்கு மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இராணி, ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோர் வழங்கினார்கள்.

இது விருது பெற வந்த கலைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் 70-க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



பிரபல மலையாள நடிகை பார்வதி மேனன் டேக் ஆப் என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதேபோல நடிகர் பகத் பாசிலும் சிறந்த நடிகருக்கான விருது பெற டெல்லி சென்றிருந்தார். இவர்கள் விருது வழங்கும் விழாவை புறக்கணித்தனர். இதுபற்றி நடிகை பார்வதி மேனன் கூறும் போது, ஜனாதிபதி கையால் தேசிய விருது பெறுவது என்பது மிகவும் கவுரவமான மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாகும்.

முதல் முறையாக விருது பெறுபவர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் ஜனாதிபதி அனைவருக்கும் விருது கொடுக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறந்த டைரக்டர் விருது பெற்ற மலையாள பட இயக்குனர் ஜெயராஜன், சிறந்த பாடகர் விருது பெற்ற ஜேசுதாஸ் ஆகியோர் ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. #NationalAwards2018 #ParvathyMenon

Tags:    

Similar News