சினிமா

கடன்பாக்கியால் ஏலம் விடப்படும் டைரக்டர் கே.பாலசந்தரின் சொத்துக்கள்

Published On 2018-02-13 06:18 GMT   |   Update On 2018-02-13 06:18 GMT
தமிழ் திரை உலகின் பிதாமகன் என்றும், இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்பட்ட இயக்குநர் கே.பாலச்சந்தரின் சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படும் என்று யுகோ வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #KBalachander
தமிழ் திரை உலகின் பிதாமகன் என்றும், இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்பட்டவர் கே.பாலச்சந்தர். சினிமாவின் மிக உயரிய தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர். 1981-ம் ஆண்டு கவிதாலயா என்ற சினிமா படதாயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

முதன் முதலில் ரஜினியை வைத்து நெற்றிக்கண் படத்தை எடுத்தார். தொடர்ந்து புதுக்கவிதை, மணல் கயிறு, அக்னி சாட்சி, நான் மகான் அல்ல, பூ விலங்கு, அச்சமில்லை அச்சமில்லை, ராகவேந்தர், சிந்துபைரவி, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, புதுபுது அர்த்தங்கள், அண்ணாமலை, ரோஜா, முத்து, சாமி, திருமலை, ஐயா, குசேலன் உள்பட 63 படங்களை தயாரித்தார்.

தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் படங்களை தயாரித்தார். பட விநியோகத்திலும் ஈடுபட்டார். கவிதாலயா நிறுவனத்தில் பாலசந்தரின் மனைவி ராகம் பாலச்சந்தர், மகள் புஷ்பா கந்தசாமி ஆகியோர் பங்குத்தாரர்களாக செயல்பட்டனர்.

கவிதாலயா நிறுவனம் சார்பில் யுகோ வங்கியில் கடன் பெறப்பட்டது. இதற்கு அசலுடன் வட்டி சேர்ந்தது. ரூ.1.36 கோடி பாக்கி இருப்பதாக கூறி யுகோ வங்கி சார்பில் கவிதாலயா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பாலச்சந்தர் இறந்து விட்டதால் அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடன் திருப்பி செலுத்தப்படாததால் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று யுகோ வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதன்படி மைலாப்பூரில் உள்ள பாலச்சந்தரின் 2 வீடுகளுக்கு ஏல நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



மைலாப்பூரில் லேடி தேசிகா சாலையில் உள்ள வணிக வளாகத்தின் 2-வது தளத்தில் 2 பிளாட்டுகள் உள்ளது. 1700 சதுர அடிகொண்ட ஒரு பிளாட் பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பெயரில் உள்ளது. இதற்கு யுகோ வங்கி ஏலத்தொகையாக ரூ.87 லட்சம் அறிவித்துள்ளது.

மற்றொரு பிளாட் 2,400 சதுர அடி கொண்டது. இது பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலச்சந்தர் பெயரில் உள்ளது. இதற்கு ஏலத் தொகையாக ரூ.1.19 கோடி என நிர்ணயித்துள்ளது.

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலச்சந்தர் இறந்த பின்பு கவிதாலயா நிறுவனம் படங்கள் எதையும் தயாரிக்கவில்லை. 2008-ல் வெளியான குசேலன் படம் தோல்வி அடைந்ததால் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தார். அதன் பிறகு திருவண்ணாமலை என்ற படத்தை மட்டுமே தயாரித்தார். அறிமுகம் இல்லாத நடிகர்களால் இதுவும் சரியாக ஓடவில்லை. இந்த இரு படங்கள் தான் கவிதாலயாவின் கடைசி தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. #KBalachander
Tags:    

Similar News