சினிமா

சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம் - நடிகை அமலாபாலுக்கு முன்ஜாமீன்

Published On 2018-01-18 10:33 GMT   |   Update On 2018-01-18 10:33 GMT
சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், நடிகை அமலாபாலுக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் புதுச்சேரியில் சொகுசு கார்களை பதிவு செய்து அவற்றை கேரளாவில் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்து உள்ளது.

இதன் மூலம் கேரள அரசுக்கு அவர்கள் வரி இழப்பு ஏற்படுத்தி வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நடிகை அமலாபால், நடிகர் சுரேஷ்கோபி எம்.பி., பகத் பாசில் ஆகியோரும் இந்த புகாரில் சிக்கி உள்ளனர். இது தொடர்பாக முதலில் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அதன்பிறகு இந்த வழக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இவர்கள் புதுச்சேரியில் வாடகை வீடு எடுத்திருப்பது போல போலி ஆவணங்களை தயார் செய்து சொகுசு கார்களை அங்கு பதிவு செய்து உள்ளது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அமலாபால், சுரேஷ்கோபி எம்.பி., பகத்பாசில் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை நடிகை அமலாபால் மறுத்தார். முறைப்படி தான் காரை பதிவு செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படியும் அதன் பிறகு முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டது.



அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அமலாபால் ஆஜரானார். அப்போது போலீசாரிடம் அவர் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில் நடிகை அமலாபால் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசார் முன்பு இதே வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆஜரான நடிகர்கள் சுரேஷ்கோபி எம்.பி. மற்றும் பகத்பாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News