சினிமா

குழந்தைகளுக்கு பயத்தையும், ஆசையைும் ஏற்படுத்தும் படம் `சங்கு சக்கரம்' - பி.வாசு பாராட்டு

Published On 2017-12-27 08:23 GMT   |   Update On 2017-12-27 08:23 GMT
குழந்தைகள் விரும்பும்படியாக பயத்தையும், ஆசையைும் ஏற்படுத்தும் படியாக `சங்கு சக்கரம்' வந்திருப்பதாக இயக்குநர் பி.வாசு பாராட்டி இருக்கிறார்.
குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள் வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. 

அந்த வகையில் இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாக உள்ள படம் `சங்கு சக்கரம்'. மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திலீப் சுப்பராயன், கீதா, ஜெர்மி ரோஸ் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஷபீர் இசையமைத்திருக்கிறார். 

குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக வெளியாகும் படங்களில் நகைச்சுவை படங்களுக்கு இணையாக ஹாரர் படங்களுக்கும் பங்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 



இந்த படததின் சிறப்பு காட்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர். படம் பார்த்த இயக்குநர் பி.வாசு கூறுகையில், ஹாரர் காமெடியை புதுமையாக காட்டியிருக்கிறார் மாரிசன். குழந்தைகளுக்கு பேய் படங்களை பார்க்கும் போது பயமும், ஆசையும் இருக்கும். அந்த இரண்டையும் மனதில் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். எத்தனையோ பேய் படங்கள் வந்தாலும், இது ஒரு வித்தியாசமான பேய் படம். குறிப்பாக படத்தின் இசை சிறப்பு. கேட்காத சத்தங்களை கேட்க முடிகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றார். 

லியோவிஷன் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. 

Tags:    

Similar News