சினிமா

இயக்குனராக அவதாரம் எடுக்கும் அரவிந்த் சாமி

Published On 2017-12-17 11:54 GMT   |   Update On 2017-12-17 11:54 GMT
பல படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த் சாமி விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார்.
‘தளபதி’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘ரோஜா’, ‘மறுபடியும்’, ‘பாம்பே’, ‘இந்திரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

1999ம் ஆண்டு வெளியான ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு, ‘சாசனம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆனார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘தனி ஒருவன்’ இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான பெயரை பெற்றுத் தந்தது. 

தற்போது இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே கலந்துரையாடி இருக்கிறார். இதில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

மணிரத்னம் புதிய படம் பற்றி என்று ஒருவர் கேட்டதற்கு, நான் அதில் நடிக்கிறேன். பாஸுக்கு பிடிக்காது என்பதால் எதுவும் கூற முடியாது என்று அரவிந்த்சாமி பதில் அளித்துள்ளார். விரைவில் இயக்குனராகும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, ஆமாம் 2018ம் ஆண்டில் நடக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

ஆசைப்பட்டு கிடைக்காத விஷயம் எது ப்ரோ என ஒருவர் கேள்வி எழுப்பினார். கிடைக்காத விஷயத்துக்கு ஆசைப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி.

அரசியலுக்கு வரும் ஐடியா இருக்கிறதா என்ற கேள்விக்கு, இல்லை என பதில் அளித்துள்ளார் அரவிந்த் சாமி.
Tags:    

Similar News