சினிமா

வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்

Published On 2017-11-10 11:37 GMT   |   Update On 2017-11-10 11:37 GMT
‘களத்தூர் கிராமம்’ படத்தில் கிஷோருக்கு மகனாக நடித்த மிதுன் குமார் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புவதாக கூறியிருக்கிறார்.
‘களத்தூர் கிராமம்’ படத்தில் கிஷோரின் மகனாக நடித்து இருப்பவர் மிதுன்குமார். இவர் பிரபல பட தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் மகன். திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், 2 படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார்.

களத்தூர் கிராமம் படத்தில் நடித்தது குறித்து கூறிய மிதுன் குமார்...

“உதவி இயக்குனராக இருந்த நான், இந்த படத்தில் நடிக்க காரணம் இயக்குனர் மகிழ்திருமேனி தான். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆசை. என்றாலும், வில்லனாக நடிப்பதில் தான் அதிக ஆர்வம் இருக்கிறது. நாடகத்தில் நடிக்கும் போது கூட எனது கண்கள், சிரிப்பு ஆகியவற்றை பார்த்து பெரும்பாலும் வில்லன் வேடங்களே தேடிவந்தன. தமிழில் மட்டுமல்ல தென் இந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அடுத்து ‘கடமை’ குறும்படத்துக்கு தேசிய விருது வாங்கிய இயக்குனர் ரத்னசிவா, சமுத்திரகனி உதவியாளர் ரடான் ராஜா இயக்கும் படங்களில் நடிக்கிறேன்.



‘மெர்சல்’ படத்தில் விஜய் சார் மருத்துவமனைகள் பற்றி பேசிய வசனங்கள் உண்மைதான். நானே ஒரு விபத்தில் சிக்கினேன். என்னுடன் காரில் இருந்தவர் இறந்தார். ஒரு ஆஸ்பத்திரியில் என்னை சேர்த்தார்கள். அங்கு டாக்டருக்கு பதில் அனுபவம் இல்லாத நர்சு என்னை பரிசோதித்து விட்டு நான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லி பிணத்தோடு கிடத்தி விட்டார்கள். நல்ல வேளையாக எனது நண்பர்கள் என்னை வேறு ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் உயிர் பிழைத்தேன்.

ஏ.டி.எம். கார்டை பயன்படுத்துவதை பொறுத்து காப்பீடு உண்டு. ஆனால் தராமல் ஏமாற்றுகிறார்கள். மெர்சல் படத்தில் விஜய் சார் சொன்னது 200 சதவீதம் உண்மை. தப்பை தப்பு என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.

Tags:    

Similar News