சினிமா

அடிதடி வழக்கு: சந்தானத்திற்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

Published On 2017-10-13 10:37 GMT   |   Update On 2017-10-13 10:37 GMT
அடிதடி வழக்கில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்த சந்தானத்திற்கு, நிபந்தனையுன் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவருக்கும், கட்டுமான நிறுவன அதிபர் சண்முக சுந்தரத்துக்கும் பண பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முக சுந்தரம் அலுவலகத்துக்குள் புகுந்து நடிகர் சந்தானம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சண்முக சுந்தரம் மற்றும் அவரது நண்பர் வக்கீல் பிரேம் ஆனந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் சந்தானத்தை தேடிவருகின்றனர்.

இதற்கிடையில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘காயம் அடைந்ததாக கூறப்படும் வக்கீல் பிரேம் ஆனந்த் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பது குறித்து போலீசார் பதிலளிக்க வேண்டும்’, என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் விசாரணையை இன்று தள்ளிவைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சந்தானம் 2 வாரம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News