சினிமா

அடிதடி வழக்கு: நடிகர் சந்தானம் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்

Published On 2017-10-10 11:18 GMT   |   Update On 2017-10-10 11:18 GMT
பணத்தகராறில் ஏற்பட்ட மோதலில் கட்டிட காண்டிராக்டர் மற்றும் நடிகர் சந்தானத்துக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சந்தானம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். வளசரவாக்கம், சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம்(40), இவர் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து சந்தானம் குன்றத்தூர் அடுத்த கோவூர், மூன்றாம் கட்டளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் கட்டிடம் கட்ட முடிவு செய்தார்.

இதற்காக சந்தானம் தனது பங்களிப்பாக ஒரு பெரிய தொகையை சண்முகசுந்தரத்திடம் கொடுத்தார். பின்பு சில காரணங்களால் கட்டிடம் கட்டும் முடிவை இருவரும் நிறுத்திவிட்டனர். இதையடுத்து சந்தானம் தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.

இதில் குறிப்பிட்ட தொகையை சண்முகசுந்தரம், சந்தானத்திடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதம் தர வேண்டிய தொகையை தருமாறு சந்தானம் கேட்டு வந்தார். ஆனால் சண்முகசுந்தரம் மீதி தொகையை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று சந்தானம் தனது மேலாளர் ரமேஷ் உடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பரும், பா.ஜனதா பிரமுகருமான பிரேம் ஆனந்த் ஆகியோர் இருந்துள்ளனர்.

சந்தானம் தனக்கு தரவேண்டிய தொகையை கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் சண்முகசுந்தரம் மற்றும் பிரேம்ஆனந்த் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. நடிகர் சந்தானத்துக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தானம் கொடுத்த புகாரின் பேரில் காண்ட்ராக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் காண்ட்ராக்டர் கொடுத்த புகாரின் பேரில் சந்தானம் மீதும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் பாஜக-வை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக கட்சியினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திரண்டு நடிகர் சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தான் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தினால் நடிகர் சந்தானம் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளையோ அல்லது நாளை மறுநாளோ விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News