சினிமா

நடிகை கடத்தல் வழக்கு: சினிமா டைரக்டரிடம் 5 மணி நேரம் விசாரணை

Published On 2017-09-18 04:32 GMT   |   Update On 2017-09-18 04:32 GMT
பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சினிமா டைரக்டர் நாதிர்ஷாவிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி சினிமா டைரக்டர் நாதிர்ஷாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். (இவர், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் நண்பர் ஆவார்.)

இதையடுத்து நாதிர்ஷா கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்காக சிறப்பு விசாரணைக் குழு முன்பாக ஆஜர் ஆனார். அப்போது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் அவரிடம் விசாரணை நடத்துவது தள்ளிவைக்கப்பட்டது.



இந்த நிலையில் நாதிர்ஷா நேற்று கொச்சியில் உள்ள அலுவா போலீஸ் கிளப்பில், விசாரணைக் குழு முன்பாக ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் 5 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இந்த சம்பவத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, நான் அப்பாவி என்பதை போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறேன். இதில் நடிகர் திலீப்பும் அப்பாவி என்று இன்னும் நான் நம்புகிறேன். பல்சர் சுனிலுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறி இருக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு டைரக்டர் நாதிர்ஷா கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது இன்று(திங்கட்கிழமை) விசாரணை நடக்கிறது.

இதேபோல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் திலீப் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த புதிய மனு அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News