சினிமா

பழம்பெரும் கன்னட நடிகர் சுதர்ஷன் மரணம்

Published On 2017-09-09 04:17 GMT   |   Update On 2017-09-09 04:17 GMT
பழம்பெரும் கன்னட நடிகர் சுதர்ஷன் நேற்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா, கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னட திரையுலகின் ‘காதல் மன்னன்‘ என அழைக்கப்பட்டவர் சுதர்ஷன் (வயது 78). பழம்பெரும் நடிகரான இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுதர்ஷன், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று நடிகர் சுதர்ஷன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனை மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர். நடிகர் சுதர்ஷனின் மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தலைவர் சா.ரா.கோவிந்து மற்றும் கன்னட நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சுதர்ஷன், சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பன்முக திறமைக்கு சொந்தக்காரரான இவர் கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் பாயும் புலி, வேலைக்காரன், நடிகர் கமல்ஹாசனுடன் புன்னகை மன்னன், நாயகன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் இவர் தயாரிப்பாளராகவும், பாடகராவும் வலம் வந்தார்.

இவருக்கு கன்னட திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘விஜயநாகராதா வீரபுத்ரா‘ வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. சுதர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா குடும்ப பின்னணி கொண்ட சுதர்ஷனின் தந்தை நரேந்திர ராவ், கன்னட திரைப்பட வர்த்தகக்குழு தலைவராக இருந்து உள்ளார். இதேபோல் இவரது சகோதரர் ஜெயகோபால் பிரபல கன்னட சினிமா கதை ஆசிரியராகவும், மற்றொரு சகோதரர் கிருஷ்ண பிரசாத் சினிமா பிரபலமாகவும் உள்ளனர். மறைந்த கன்னட நடிகர் சுதர்ஷனுக்கு சைலாஸ்ரீ என்ற மனைவியும், அருண் குமார் என்ற மகனும் உள்ளனர்.
Tags:    

Similar News