சினிமா

ரஜினி - கமல் நிச்சயம் அரசியலுக்கு வருவார்கள்: பரத்வாஜ் பேட்டி

Published On 2017-09-07 09:05 GMT   |   Update On 2017-09-07 09:05 GMT
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் நிச்சயம் அரசியலுக்கு வருவார்கள் என்று இசை அமைப்பாளர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பட இசை அமைப்பாளர் பரத்வாஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழந்த சம்பவம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நீட் தேர்வு அவசியம் இல்லை என்றால் அதனை நீக்க வேண்டியதுதான். இனி எந்தவொரு மாணவ-மாணவியும் நீட் தேர்வுக்காக உயிரிழக்க கூடாது. நீட் தேர்வு முடியாத நிலை என்றபோது அதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாரம்பரிய விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. நீலதிமிங்கலம் ஆன்-லைன் விளையாட்டு வீட்டுக்குள் தனியாக இருக்கும் சிறுவர்களை மனரீதியாக அடிமையாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திரைப்பட கலைஞர்கள் அரசியலுக்கு வருவது இயல்பு.



நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்கள். இவர்களுக்கு மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது. ஜனநாயகத்தை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கேரளாவில் நடிகை துன்புறுத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், நடிகர்களாக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம் வேண்டும்.

நான் 24 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் இசை அமைத்து உள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக மட்டும் திருக்குறளில் நேரம் செலவழித்தேன். இதனால் நான் சினிமாவை விட்டு சென்று விட்டதாக பலர் நினைத்தனர். தற்போது சினிமாவில் மறுபிரவேசம் செய்து உள்ளேன். டைரக்டர்கள் சரண், செந்தில்நாதன் படங்களில் இசை அமைக்கிறேன்.

இவ்வாறு பரத்வாஜ் கூறினார்.
Tags:    

Similar News