சினிமா

அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை கமல், ரஜினிக்கு இல்லை: பார்த்திபன்

Published On 2017-08-07 07:53 GMT   |   Update On 2017-08-07 07:53 GMT
அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு இல்லை என நடிகர் பார்த்திபன் கூறினார்.
‘பொதுவாக எம்மனசு தங்கம்‘ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் தளபதி பிரபு, நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் தளபதி பிரபு நிருபர்களிடம் கூறுகையில், நடிகர் உதயநிதி இதுவரை நகரத்து ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முதல்முறையாக கிராமத்து கதாநாயகன் வேடம் ஏற்றுள்ளார். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரம் நாயகி நிவேதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சற்று மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்துள்ளார். நகைச்சுவைக்கு சூரி நடித்துள்ளார். வருகிற 11-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது என்றார்.

இதைதொடர்ந்து நடிகர் பார்த்திபன் கூறியதாவது:-

தனி மனித சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த சுதந்திரத்தின் அளவை உணர்ந்து செயல்படும் நடிகர் கமல்ஹாசனின் செயல்பாடு வியப்பு அளிக்கிறது. அரசு குறைகளை சுட்டிக்காட்டும் அவரது துணிச்சலான கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.



அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் உள்ளது என்று ரஜினிகாந்த் அண்மையில் கூறினார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதே ஆண்டவன் கையில் இருக்கும்போது அதை ஏன் அவரிடம் கேட்கிறீர்கள், ஆண்டவரிடம் அல்லவா நீங்கள் கேட்க வேண்டும் என்ற நகைச்சுவை பொருள்படும்படி டூவிட்டர் பக்கத்தில் நான் கருத்து தெரிவித்து இருந்தேன். இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்த கருத்தை வெளியிடவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் மீது எனக்கு தனி மரியாதை உள்ளது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறை செலுத்தும் ஒரு நபருக்கு எதிராக எப்போதும் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் தொடர்பாக பேசுவது பணத்திற்காக, சுய லாபத்திற்காக என்று சிலர் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து, அரசியலுக்கு வந்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இருவரும் இல்லை.

ஜி.எஸ்.டி. மூலம் வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News